
கிழக்கு மாகாணத்திலும் பொலநறுவை, அநுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர்ச் செய்கை இழப்புகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது தாம் விடுத்த வேண்டுகோளுக்கு ராஜபக்ஷ நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகவும் அடை மழை காரணமாக வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் சேதங்களையும் மதிப்பீடு செய்யுமாறு விவசாய அமைச்சரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அதற்காக உயர்மட்டக் குழுவொன்றை வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலைமையை நேரில் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தாம் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் செல்லவிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறினார்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வெள்ள நீர் மட்டம் உயர்வடைந்து கொண்டே செல்வதனால் அங்குள்ள மக்களை இயன்ற வரை விரைவாக திருகோணமலைக்கு கப்பல், வள்ளங்கள் மூலமாக அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு திருமலை துறைமுக மாஸ்டர் கப்டன் லக்ஷீ வசந்தவுடன் தொடர்பு கொண்டு அமைச்சர் பணித்துள்ளார்.
சேருவில2 என்ற கப்பலை அதற்குப் பயன்படுத்த முடியும் என கப்டன் வசந்த இணக்கம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் பொலனநறுவை, அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் இன்னல் குறித்தும் இழப்புகள் குறித்தும் தாம் அதிகம் கவலையடைந்துள்ளதாகவும் அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது